கோழி, ஆடு, மாட்டிறைச்சிகளை கொண்டு வந்த வெளிநாட்டு ஊழியர் – சாங்கி ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம்

சிங்கப்பூருக்குள் பல்வேறு வகையான இறைச்சிப் பொருட்களை சட்டவிரோதமாக கொண்டு வந்த வெளிநாட்டு ஊழியருக்கு இன்று (செப். 29) நீதிமன்றத்தில் S$17,500 அபராதம் விதிக்கப்பட்டது.
இதனை சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) மற்றும் குடிநுழைவு & சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.
சாங்கி விமான நிலையத்தில் பல்வேறு பதப்படுத்தப்பட்ட இறைச்சி பொருட்கள் அடங்கிய எட்டு உடமைகளை கடந்த ஜூன் மாதம் ICA கண்டறிந்தது. அதன்பின்னர் இது பற்றி SFA க்கு தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர் அந்த பொருட்கள் சீனாவைச் சேர்ந்த வாங் லியான்ஷெங்கிற்குச் சொந்தமானது என்று கண்டறியப்பட்டது.
மேலும் அதில் சுமார் 226 கிலோ எடையுள்ள பல்வேறு இறைச்சிப் பொருட்களான கோழி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் சீனாவிலிருந்து வந்த முயல் இறைச்சி ஆகியவை இருந்தன.
சட்டவிரோத உடைமைகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதாக SFA மற்றும் ICA தெரிவித்துள்ளது.