கட்டுப்பாடுகள் இனி இல்லை…எல்லைகளைத் திறக்க தயாராகும் இந்த நாடு..!

மார்ச் 1, 2022 முதல் அனைத்துலகப் பயணிகளுக்கு நாட்டின் எல்லைகளைத் திறந்துவிட மலேசிய அரசாங்கத்தின் ஆலோசனை மன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், கட்டாயத் தனிமை உத்தரவின்றி பயணிகளை அனுமதிக்கவும் அம்மன்றம் பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து மலேசியாவின் தேசிய பொருளியல் மீட்சி மன்றத் தலைவரும், முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் கூறுகையில், பயணிகள் மலேசியாவுக்கான பயணத்தைத் தொடங்கும் முன்பும், மலேசியாவுக்கு வந்த பிறகும் கோவிட்-19 பரிசோதனைகளைப் செய்துகொள்வது அவசியம் என்றார்.
மலேசியாவின் பொருளியல் மீட்சிக்கு உதவும் வகையில் எல்லைகளை முழுமையாகத் திறக்க அரசாங்கத்தின் ஆலோசனை மன்றம் பரிந்துரைத்துள்ளது என்றும், கட்டாயத் தனிமை உத்தரவின்றி மார்ச் 1 முதல் நாட்டின் எல்லைகளை முழுமையாகத் திறக்க மன்றம் ஒப்புதல் வழங்குகிறது என்றும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதற்கு இணங்க, மலேசியாவிற்குள் வரும் முன்பும், வந்த பிறகும் கோவிட்-19 பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும் என்றும், நாட்டின் எல்லைகளைத் திறக்கும் நிகழ்வு, தற்போதைய கிருமிப்பரவல் நிலைமைக்கு ஏற்ப செய்யப்பட வேண்டியது என்றும் முகைதீன் யாசின் குறிப்பிட்டார்.
எல்லைகளைத் திறப்பது குறித்து முன்னதாக பேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், பூஸ்டர் தடுப்பூசி விகிதம் மேம்பட்ட பின்னரே எல்லைகளைத் திறக்க அரசாங்கத்திற்கு தமது அமைச்சகம் பரிந்துரைக்கும் என கடந்த பிப்ரவரி 3ம் தேதி குறிப்பிட்டார்.
மலேசியா மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மேலும் 53 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மூத்தோர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதல் முறையாக முடக்கநிலை அறிவிக்கப்பட்டது முதல் மலேசியாவின் எல்லைகள் மூடப்பட்பட்டது. அண்மையில் சிங்கப்பூருடனான VTL பயணத்திட்டத்தை மலேசியா தொடங்கியது குறிப்பிடத்தக்கது.