சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் வீட்டில் மர்ம கும்பல் வேட்டை

சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் வீட்டில் கைவரிசையை காட்டிய மர்ம கும்பலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் கடலுார் அருகே சிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவரின் சொந்த வீடு உள்ளது. அங்கு சுவரின் வழியாக துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம கும்பல் தங்கம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
49 வயதான பச்சமுத்து என்பவர் பெரம்பலுார் மாவட்டம் பள்ளக்காளிங்கராய நல்லுார் பகுதியை சேர்ந்தவர். இவர் சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
மேலும், இவருக்கு கடலுார் மாவட்டம் திட்டக்குடி அருகே சொந்த வீடும் உள்ளது. சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வரும்போதெல்லாம் அவர் அங்கே தான் தங்கி வருவார்.
தன் வீட்டை CCTV கேமரா மூலமாக சிங்கப்பூரில் இருந்து அவர் பார்த்து வருவது வழக்கம். அப்போது கேமரா ஒர்க் ஆகாத காரணத்தால் அங்குள்ள அவரது மேலாளர் ரமேஷ் என்பவரை சென்று பார்க்க சொல்லியுள்ளார்.
ரமேஷ் அடுத்த நாள் சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க சுவரில் துளை போடப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அலங்கோலமாக இருந்தது.
அதாவது 1.5 சவரன் தங்கம், CCTV கேமரா ஹார்டு டிஸ்க் மற்றும் விலை உயர்ந்த எலெக்ட்ரோனிக் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
தரையையும் விடாமல் தோண்டி பார்த்துள்ளனர் மர்ம கும்பல். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போலீஸ் விசாரணை நடப்பதாகவும் கூறப்படுகிறது.