சிங்கப்பூரில் “தமிழ் மொழியை” ஆட்சிமொழியாக்கிய நிஜ நாயகன் “லீ குவான் யூ” – சுவாரஸ்ய சரித்திரம்!

ஆசியாவின் இருண்ட மூலையில் இருக்கும் சிறிய சந்தை என்றிருந்த சிங்கப்பூரை, ‘பொருளாதாரப்புலி’ என்று மாற்றிக்காட்டிய சிங்கப்பூரின் நிஜ நாயகன் லீ குவான் யூ.

நான் உயிருடன் இருக்கும் வரையில் எனது நாட்டை யாரிடமும் விட்டுத் தரவே மாட்டேன். ஒருவேளை, நான் இறந்த பிறகு என் நாட்டுக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டால், கல்லறையில் இருந்தும் கூட எழுந்து வருவேன் என முழங்கியவர் லீ குவான் இயூ.

பிறப்பும், படிப்பும்

சீனாவில் உள்ள செல்வ வளம்மிக்க பாரம்பரிய குடும்பத்தில் 1923 ம் ஆண்டு பிறந்தவர் சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் இயூ. இவரது பெயருக்கு சீன மொழியில் ஒளியும் பிரகாசமும் எனப் பொருளப்படும். லீயின் தாத்தா பெரும் செல்வந்தராக இருந்தாலும், சிங்கப்பூரின் மந்த நிலை அந்த குடும்பத்தையும் பதம் பார்த்தது.

சிறு வயது முதல் படிப்பில் கெட்டிக்காரராக இருந்தார் லீ. ராபிள்ஸ் பள்ளியின் சிறந்த மாணவன் என்ற சான்றிதழ் கொடுக்கும் அளவுக்கு அனைத்துத் துறைகளிலும் சிறந்தவராக இருந்துள்ளார் லீ.

பின்னர், ராபிள்ஸ் கல்லூரியில் சேர்ந்து மேல் படிப்பை மேற்கொண்டார். அடுத்து, சட்டப் படிப்புக்காக லண்டன் (கேம்ப்ரிட்ஜ்) சென்றார். அங்கு தலைவிரித்தாடிய இனவெறி, லீயை அரசியலுக்குள் இழுத்து சென்றது. இந்த நிலையில்தான் வழக்கறிஞர் படிப்பை முடித்து சிங்கப்பூர் திருப்பினார் லீ.

சிங்கப்பூரும், மக்கள் செயல் கட்சியும்

1952ம் ஆண்டு சிங்கப்பூரே திணறும் அளவுக்கு தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. இது பிரிட்டன் அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. அப்போது லீ, போராட்டத்துக்கு ஆதரவாக பல உதவிகளையும், பாதிக்கப்பட்ட பலருக்காகவும் வாதாடியும் வந்தார்.

இது சிங்கப்பூர் மக்களிடையே நல்ல பெயரை அவருக்குப் பெற்றுத்தந்தது. அதே வேலையில் 1954ம் ஆண்டு லீ தனது நண்பர்களுடன் இணைந்து மக்கள் செயல் கட்சி (PAP) எனும் புதிய கட்சியை உருவாக்கினார். மக்கள் செயல் கட்சி உருவான இரண்டாவது ஆண்டே சிங்கப்பூரில் சட்டசபைத்தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் மக்கள் செயல் கட்சி 3 இடங்களைப் பிடித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.

விடுதலைக்கான முன்னெடுப்பு

பின்னர், 1959ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மக்கள் செயல் கட்சி 43 இடங்களை வென்றது. லீ-யின் இந்த அசுர வளர்ச்சி
பலரையும் அதிச்சியில் ஆழ்த்தியது. அதேநேரம், பிரிட்டன் பிடியில் இருந்து வெளியேற வேண்டும் எனும் பொதுச் சிந்தனை மக்கள் மத்தியில் ஏற்பட ஆரம்பித்தது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கப்பூர் முதல்வருக்கும், பிரிட்டனின் நியமன ஆளுநருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், 1957ம் ஆண்டு தன்வசம் இருந்த மலாய் தீபகற்பத்திற்கு பிரிட்டன் விடுதலை அளித்தது. இதற்கு பின் மலாய் தீபகற்பம் ‘மலேயா’ என அழைக்கப்பட்டது. உடனே சுதாரித்த கொண்ட சிங்கப்பூர், விடுதலை பெறுவதற்கான முன்னெடுப்புகளை செயல்பட தொடங்கியது.

தனி நாடான சிங்கப்பூர்

இதற்கிடையில், தொடர் அழுத்தம், பலகட்டப் பேச்சுவார்த்தை லீயின் அயராத முயற்சி ஆகியவற்றால் 1959ம் ஆண்டு சிங்கப்பூர் தன்னாட்சி பெற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூரின் முதல் பிரதமராக 36 வயதில் லீ குவான் இயூ பதவியேற்றார். சிங்கப்பூரின் புதிய அதிபராக யூசுப் பின் இஷாக் அவர்களும் பதவியேற்றார். இவர் லீயின் நெருங்கிய நண்பரும், மலாயு என்ற பத்திரிகையின் நிர்வாகத்தில் இருந்தவர ஆவார். மலாய் கூட்டரசுடன் சிங்கப்பூரை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியது.

கூட்டரசுகள் இணைந்தால் உண்டாகும் நன்மைகள் குறித்து வானொலியில் லீ விளக்கினார். பின்னர், 1963ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி, மலாயா, சாபா, சரவா உள்ளிட்ட நாடுகளை கொண்ட கூட்டரசு உருவானது. அதற்கு மலேசியா எனப் பெயரிடப்பட்டது. கூட்டரசில் இணைந்தாலும் சிங்கப்பூர் சுதந்திர நாடாகச் செயல்படும் என லீ குவான் அறிவித்தார். இது மலேசிய அதிபர் துங்கு அப்துல் ரகுமானுக்கு எரிச்சலை உண்டாக்கியது

மலேசியா – சிங்கப்பூர் விரிசல்

லீ குவான் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வலம் வருவதை மலேசிய பிரதமரால் தாங்கிக் கொள்ள முடியாவில்லை. மலேசிய பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தனது மேலாதிக்க மனோநிலையை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார். இந்த நிலையில் தான், சீனர்களுக்கும், மலாய்காரர்களுக்கும் இடையே மத்தியில் மிகப்பெரும் இனக் கலவரம் மூண்டது. 1964ம் ஆண்டு பாடாங்கில் ஏற்பட்ட கலவரம் சிங்கப்பூர் முழுவதிலும் பரவியது.

சுமார் 10 நாட்களுக்கும் மேல் நீடித்த இந்த கலவரத்தில், 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தக் கலவரம் சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையிலான விரிசலை அதிகப்படுத்தியது. இருப்பினும், சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்து செயல்படவே விரும்பியது.

மிகச்சிறிய தீவான சிங்கப்பூர், தண்ணீருக்குக் கூட மலேசியாவையே சார்ந்திருந்தது. பிரதானத் தேவைகளுக்கு மலேசியாவே அதன் நம்பிக்கை. ஆனாலும் பொருளாதாரம் சிறப்பாகவே இருந்தது. சிங்கப்பூர் கூடுதல் சுமை என மலேசிய ஆட்சியாளர்கள் கருதினர். இந்த இனக் கலவரம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது. சிங்கப்பூரை பிரித்து விட வேண்டும் என மலேசிய பிரதமர் கூறினார். லீ குவான் இயூ எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார் பிரிவினை வேண்டாம் என மன்றாடினார்.ஆனால் மலேசிய ஆட்சியாளர்கள் அதை பொருட்படுத்தவில்லை.

மனம் உடைந்த லீ:

இதனிடையே, சிங்கப்பூர் பிரிவினைக்கு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் சிங்கப்பூர் பிரிந்து செல்ல வேண்டும் என்பதற்கு ஆதரவாக அதிக ஓட்டுகள் விழுந்தன. இதில் சிங்கப்பூர் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. லீ குவான் இயூ மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்தது. 1965 ஆகஸ்ட் 9ம் தேதி சிங்கப்பூர் பிரிவதை மலேசிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது.

அந்த சமயத்தில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த லீ, இந்தப் பிரிவினை அறிவிப்பை என்னால் தாங்க முடியவில்லை. என் வாழ்க்கை முழுவதும் சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்து இருக்கவேண்டும் என்று எண்ணினேன். பொருளாதாரம், புவியியல் அடிப்படையில் இருதரப்பு மக்களும் ரத்த உறவினர்கள். ஆனாலும், இந்தப் பிரிவு நடந்துவிட்டது என உடைந்த குரலில் கண்ணீருடன் பேசினார். இரண்டே ஆண்டுகளில் சிங்கப்பூர் தனிமரமாக நின்றது. வலுக்கட்டாயமாக சிங்கப்பூருக்கு சுதந்திரம் கொடுத்தது மலேசியா.

சாதித்து காட்டிய சிங்கப்பூரின் சிற்பி:

சிங்கப்பூருக்கு அண்டை நாடான இந்தோனேசிய ராணுவம் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம், இயற்கை வளங்கள் ஏதுமில்லை, எல்லாவற்றுக்கும் பிற நாடுகளை நம்பியிருக்கும் நிலை என இப்படி நாலா பக்கமும் சிங்கப்பூரை பிரச்சனைகள் அச்சுறுத்தி கொண்டிருந்தது. பின்னர், மீண்டும் பிரதமரான லீ, ஒற்றை மனிதராக மொத்த பாரத்தையும் தன் தோள்களில் சுமந்து கொண்டிருந்தார்.

பின்னர், சில காலங்கள் எல்லைப் பாதுகாப்புக்கு பிரிட்டனின் ராணுவ உதவியை நாடினார். பிரட்டன் தலையசைத்தது. அதற்குள் உள்நாட்டு ராணுவக் கட்டமைப்பை உருவாக்கி வலுப்படுத்தினார். தமிழ், ஆங்கிலம், மலாய், சீனம் ஆகியவை சிங்கப்பூரின் அரசு மொழியாக அறிவிக்கப்பட்டது. மலேசியாவில் இருந்து பிரிந்த ஆகஸ்ட் 9-ம் நாள், சிங்கப்பூரின் தேசிய நாளாக அறிவிக்கப்பட்டது.

இதற்கடுத்து, 117வது நாடாக தன்னை ஐக்கிய நாடுகள் சபையில் சிங்கப்பூர் இணைத்துக் கொண்டது. எதுவுமே இல்லை என்பதிலிருந்து எதுவும் சாத்தியம் என்பதை சாதித்து காட்டி சிங்கப்பூரை கட்டியெழுப்பினார் லீ குவான் இயூ. லீ குவானின் மறைவு சிங்கப்பூர் மக்களிடையே மட்டுமல்லாது, உலக அளவிலும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியது.

Related Articles

Back to top button